வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அமைச்சரவை

  0
  29

  Table of Contents

  பல்வேறு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அமைச்சரவை வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது.

  கால்நடை வளர்ப்புக்கான ரூ.15,000 கோடி கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  குஷிநகர் விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பு – சுற்றுலாவை மேம்படுத்தி, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.

  மியான்மரில் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தின் மேம்பாட்டிற்குக் கூடுதல் முதலீடு – அண்டை நாடுகளுடனான எரிசக்திப் பிணைப்புகளை வலுப்படுத்தும்.

  பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில், 24 ஜுன், 2020 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில், பல்வேறு துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைப்பு

  பின்னணி :

  அண்மையில் அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்ட ஊக்குவிப்புத் தொகுப்பின் தொடர்ச்சியாக, ரூ.15,000கோடி மதிப்பில், கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

  பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கூட்டுறவுத்துறை முதலீடுகளுக்கு உதவும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பிலான பால்வளக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை அமைக்க மத்திய அரசு, ஏற்கனவே அளித்துள்ளது. எனினும், குறு,சிறு, நடுத்தரத் தொழில்துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவித்து, அவர்களுக்கு உதவியளித்து, கால்நடை வளர்ப்புத் தொழிலில் மதிப்புக் கூட்டப்பட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது.

  Read More  இந்தியர்களுக்கு பிரதமரின் கடிதம்

  இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், பால்வளம், இறைச்சி பதப்படுத்துதல், கால்நடைத் தீவனத் தாவர வளர்ப்புக் கட்டமைப்பு முதலீட்டிற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். 10 சதவீத விளிம்புநிலைப் பணப்பங்களிப்புடைய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பிரிவு-8இல் உள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் தொழில்முனைவோர் உள்ளிட்ட தகுதிவாய்ந்த பயனாளிகள், இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இவர்களுக்கு எஞ்சிய 90 சதவீத நிதி, வர்த்தக வங்கிகளால் கடனாக வழங்கப்படும்.

  வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, மத்திய அரசு 4 சதவீத வட்டித் தள்ளுபடியும், எஞ்சிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 3 சதவீத வட்டித் தள்ளுபடியும் அளிக்கும். கடன் பெற்றதிலிருந்து 2 ஆண்டுகளுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதற்கடுத்த 6 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். இது தவிர, நபார்டு வங்கிக் கட்டுப்பாட்டில், ரூ.750கோடி கடன் உத்தரவாத நிதியம் ஒன்றையும் மத்திய அரசு அமைக்கவுள்ளது. இந்த நிதியத்திலிருந்து, குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட உச்சவரம்பு வரையிலான திட்டங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். கடன்தாரர் பெறும் கடன் தொகையில் 25 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் கிடைக்கும்.

  பலன்கள் :

  கால்நடை வளர்ப்புத் தொழிலில் தனியார் துறை முதலீடு செய்வதற்கான பெரும் வாய்ப்புகள் உள்ளன. கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், தனியார் முதலீட்டாளர்களுக்கு வட்டித் தள்ளுபடி அளிக்கப்படுவதுடன், இந்தத் திட்டங்களுக்குத் தேவையான வெளிப்படையான முதலீட்டிற்குத் தேவையான மூலதனம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, முதலீட்டாளர்களுக்கு உரிய லாபம் கிடைக்கவும்/கடனைத் திருப்பிச் செலுத்தவும் உதவும். பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், தகுதிவாய்ந்த பயனாளிகள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.

  இந்தியாவில் உற்பத்தியாகும் பால்வளப் பொருள்களின் இறுதி மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை விவசாயிகளுக்குக் கிடைப்பதோடு, இத்துறையில் ஏற்படும் வளர்ச்சி, விவசாயிகளின் வருமானத்தில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தும். பால் விற்பனை மூலம், பால்பொருள்கள் சந்தையின் அளவு மற்றும், விவசாயிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாவதும், கூட்டுறவு மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் அளவு அதிகரிப்புடன் நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே, கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.15,000 கோடி முதலீடு, தனியார் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, விவசாயிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அளவுக்கு இடுபொருள் முதலீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் அமையும். இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், சுமார் 35லட்சம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் உதவும்.

  Read More  ஈத் திருநாளையொட்டி (Idu’lFitr ) குடியரசுத் தலைவர் வாழ்த்து.

  குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பு

  பின்னணி :

  கவுதம புத்தர் இயற்கை எய்திய பிறகு மகாபரி நிர்வானம் அடைந்த முக்கிய யாத்திரைத் தலம் குஷிநகர். பவுத்த மதத்தினரின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலமாக கருதப்படும் இங்கு, உலகம் முழுவதிலுமிருந்து யாத்ரீகர்கள் வருகின்றனர். குஷிநகரைச் சுற்றி ஸ்ரவாஸ்தி(238கி.மீ), கபிலவஸ்து(190கி.மீ.) மற்றும் லும்பினி (195கி.மீ.) உள்ளிட்ட வேறு சில புத்தமதத் தலங்களும் உள்ளதால், புத்தமதத்தினர் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலமாகவும் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள புத்தமத யாத்திரைத் தலங்களில் குஷிநகர் ஏற்கனவே முக்கிய இடமாகத் திகழ்கிறது. எனவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  பலன்கள் :

  உலகெங்கிலும் வாழும் சுமார் 530 மில்லியன் பௌத்தர்களுக்கு, புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய தலங்கள், முக்கியமான யாத்திரைத் தலங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, குஷிநகர் விமான நிலையத்தை, ‘சர்வதேச விமான நிலையமாக’ அறிவித்திருப்பது, கூடுதல் விமானங்களை இயக்குவதற்கும், தொழில் போட்டி காரணமாக விமானப் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கும் வழிவகுப்பதோடு, உள்நாட்டு/சர்வதேச சுற்றுலாவிற்கு ஊக்கம் அளித்து, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிப்பதாக அமையும்.

  தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், பர்மா (மியான்மர்) போன்ற நாடுகளிலிருந்து தினந்தோறும் சுமார் 200 முதல் 300 பக்தர்கள் குஷிநகர் வந்து வழிபாடு செய்கின்றனர். எனினும், இந்த சர்வதேச சுற்றுலாத் தலத்திற்கு வர நேரடி விமானச் சேவை ஏற்படுத்த வேண்டுமென்பது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்தது.

  குஷிநகருக்கு நேரடியாக சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம், குஷிநகர் வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு, அப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும். இந்த சர்வதேச விமான நிலையம், நாட்டில் ஏற்கனவே வளர்ந்துவரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சூழலுக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மியான்மர் நாட்டிலுள்ள ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஓ.வி.எல்.நிறுவனத்தின் கூடுதல் முதலீட்டிற்கு ஒப்புதல்

  பின்னணி :

  தென்கொரியா, இந்தியா மற்றும் மியான்மர் நாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஓ.என்.ஜி.சி. விதேஷ்நிறுவனம் (ஓ.வி.எல்.), கடந்த 2002 முதல், மியான்மர் நாட்டின் ஷ்வே எரிவாயுத் திட்டத் துரப்பண மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கெயில் நிறுவனமும், இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. ஓ.என்.ஜி.சி.யின் சர்வதேசப் பிரிவான ஓ.என்.ஜி.சி.விதேஷ் நிறுவனம் 31 மார்ச், 2019 வரை இத்திட்டத்தில் 722 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3,949கோடி) முதலீடு செய்துள்ளது. ஷ்வே திட்டத்திலிருந்து முதன்முறையாக ஜுலை 2013-இல் எரிவாயு பெறப்பட்டதோடு, டிசம்பர் 2014 முதல் நிலையான உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2014-15 நிதியாண்டு முதல் இத்திட்டத்திலிருந்து லாபம் கிடைத்து வருகிறது. எனவே, மியான்மர் நாட்டின் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தில் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனம், கூடுதலாக 121.27 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.909கோடி); 1 டாலர் =ரூ.75) முதலீடு செய்வதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

  Read More  இந்திய வானியல் ஆய்வுத்துறை எச்சரிக்கை

  பலன்கள் :

  இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்பது, கிழக்கை உற்று நோக்குங்கள் என்ற இந்தியாவின் திட்டத்தின் படியும், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புத் தேவைகளை மேலும் வலுப்படுத்தவும், அண்டை நாடுகளுடனான எரிசக்திப் பிணைப்புகளை அதிகரிக்கவும் உதவும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here